வைரமுத்து, கள்ளிக்காட்டு இதிகாசம்
ஒரு பதினெட்டு-பத்தொன்பது வயசில் தன் கட்டுப்பாட்டை விட்டு மனசு ஒரு தாவு தாவிவிட்டு, ‘அய்யய்யோ! இது நடக்காது’ என்று போன வேகத்தில் திரும்பிவந்து கொஞ்சம் பரவசத்தோடும் கொஞ்சம் பரிதவிப்போடும் ‘அது ஒரு காலம்’ என்று காலமெல்லாம் அசைப்போட்டுக் கொண்டிருக்குமே...அதுதான் பேயத்தேவருக்கும் முருகாயிக்குமான ‘அது’.
ஓர் ஆணும் பெண்ணும் உறவுகொள்ள, சடங்குகள், சம்பிரதாயங்களோடு சம்மதம் வாங்கிக் கொண்டால் ஊர் அதைக் கல்யாணம் என்கிறது.
பெண்மீது ஆண் மட்டுமோ ஆண் மீது பெண் மட்டுமோ ஆசைப்பட்டு, கனவுகளையும் ஆசைகளையும் நெஞ்சில் கரணை கரணையாகக் கட்டிவைத்திருந்தால் இலக்கியம் அதை ஒருதலைக் காதல் என்கிறது.
ஓர் ஆணின் மனசும் பெண்ணின் மனசும் ஒன்றோடொன்று இடறிவிழுந்து, இடறிவிழுந்த மனசுகளின் சம்மதத்தோடு உடம்புகளும் தொட்டுக்கொண்டு, இன்பம்போல ஒரு துன்பத்தையும் துன்பம்போல ஒரு இன்பத்தையும் ஒரே நேரத்தில் அனுபவித்தால் உலகம் அதைக் காதல் என்கிறது.
“இதோ பார்! நீ எனக்கில்ல; நான் உனக்கில்ல. ஆனா நீ எனக்கு வேணும்; நான் உனக்கு வேணும். உன்னால் சுகம் எனக்கு; என்னால் சுகம் உனக்கு. போகிற போக்கில் போவோம். காலம் எங்கே நம்மைப் பிரியச் சொல்கிறதோ அங்கே லாப நஷ்டக் கணக்குப் பார்க்காமல் பிரிந்து கொள்வோம்.” இந்த ஒப்பந்தத்தோடு நடக்கிற உறவுக்குக் காமம் என்று பெயர்.
“உனக்குள்ளும் அது இருக்கிறது. எனக்குள்ளும் அது இருக்கிறது. நான்கு கண்களுக்குள் மட்டும் மினுக் மினுக் என்று அது மின்னுகிறது. வட்டமிட்டுச் சுற்றிவரவுமில்லை; திட்டமிட்டுச் சொல்லவும் முடியவில்லை. ரெண்டு மனசிலும் கனக்கிறது ஒரே பாரம். இறுதிவரை இறக்கி வைக்கவே இல்லை. கடைசியில் பிரிகிறோம் - இதயங்களுக்குள் குழிவெட்டி பாரங்களைப் புதைத்துக் கொண்டு.”
இந்த உறவுக்கு எந்தப் பெயரை வைக்கலாமோ அந்தப் பெயரை வைக்கலாம்-பேயத்தேவருக்கும் முருகாயிக்கும் அனிச்சப்பூவின் அரும்புபோலிருந்த அந்த மெல்லிய உறவுக்கு.